எனக்கு இப்போதும் மணக்கிறது அந்த இரத்த வாடை.
pradeepan, paris
கட்டுரைகள்/ஆய்வுகள்
இந்த மே மாதம் 4ம் திகதி இரவு நான் ஒரு கனவு கண்டேன். கனவு கண்டு விழித்தபோது நான் ஒரு பதட்டத்தில் இருப்பதைப் போலவும் என் அன்புக்குரிய ஏதோ ஒன்றை இழந்தது போலவும் எனக்குத் தோன்றுகின்றது. எனக்கு கனவுகள் அவ்வப்போதுதான் வரும். வரும் கனவுகள் எப்போதுமே என்னை ஒரு குழப்பத்தில் ஆழ்த்தும். கனவுகள் ஆழ்மன சிந்தனைகளின் குறியிடுகளுடனான காட்சி வடிவம் என நான் எப்போதும் நம்புவதால் என் கனவு தோன்றுவதற்கான என் ஆழ்மனக் காரணிகளை நான் தேடுவது வழக்கம். பெரும்பாலும் என் கனவுகளுக்கும் என் ஆழ்மனதிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு என நான் அறிவேன். எனது கனவில் வந்த காட்சி இது.
ஒரு அடர்ந்த காடு. அன்று பௌர்ணமி நாளென நினைக்கிறேன். நீலநிற இருள் அவ்வடர்ந்த கானகமெங்கும் பரவியிருப்பதை நான் காண்கிறேன். அங்கே ஒரு வெள்ளை நிற ஆடு நிற்கிறது. அதை நான் இப்போது பார்க்கிறேன். நிலவின் வெளிச்சத்தில் அந்த வெண்மையான ஆடு ஒரு தேவதையைப்போல ஜொலிக்கிறது. நான் அந்த ஆட்டின் அழகில் மயங்கித்தான் போகிறேன். அந்த ஆட்டை உற்று நோக்குகிறேன். அதன் முலைக்காம்பில் மூன்றோ அல்லது நான்கோ குட்டிகள் பால் குடித்தபடி இருக்கின்றன. நான் மெதுவாக அந்தத் தாய் ஆட்டை நோக்கி நடந்து செல்கிறேன். எத்தனை அழகு! என் உடல் புல்லரித்துக் கொள்கிறது. நான் ஆட்டை நோக்கி நடக்கும்போது ஏதோ ஒரு சிறு அசைவை அவதானிக்கிறேன். ஒரு மூலையில் இருந்து சத்தம் எழுவதை நான் அவதானிக்கிறேன். உற்று நோக்குகிறேன்.
ஐயோ! அங்கே ஒரு புலி மெதுமெதுவாக பதுங்கிப் பதுங்கி வருகிறது. முன்னோக்கி நடந்த என் காலகள் தடுமாறுவதை நான் அவதானிக்கிறேன். புலி வருவதை அறியாத அந்த ஆட்டுக் குட்டிகள் பசியாறிக் கொண்டிருக்கின்றன. புலி மெதுவாக அண்மித்துவிட அசுர வேகத்தில் அந்தத் தாயாட்டின் குரல்வளையை புலி கவ்வி விடுகிறது. அந்த அழகான கரும் நீலநிற வெளிச்சத்தில் தாய் ஆட்டின் கழுத்தில் குருதி வழிகிறது. புலியின் குணாம்சம் புரியாமலும் தாய் ஆட்டிற்கு நடப்பது புரியாமலும் குட்டிகள் இருக்க புலி குட்டிகளையும் கடித்துக் குதறுகிறது. ஆட்டினதும் அதன் குட்டிகளினதும் அலறல் அந்த அமைதியான கானகமெங்கும் பரவுகிறது. நான் நின்ற இடத்திலேயே விறைத்துப் போய் நிற்கிறேன். என் சக்திக்குட்பட்டு ஆடுகளைக் காப்பாற்ற என்னால் இயலாது. என் இயலாமை என் உணர்வுகளை சிதைக்கிறது. ஏதோ எங்கோ ஒரு சத்தம்.
மீண்டும் உற்றுப் பாரக்கிறேன். கானகத்தின் ஒவ்வொரு சந்துகளிலும் இரத்தப் பசியுடன் ஓநாய்கள் பல நிற்பதைக் காண்கிறேன். அவை ஒவ்வொன்றின் கண்களிலும் ஓநாய்க்கே உரிய கபடமான அமைதியான முகத்தில் ஒரு கொடூரமான இரத்த வெறி. ஆட்டின் அலறல் அடங்கி விட்டது. புலி மாமிசத்தைப் புசித்தபடி இருக்கிறது. அதன் வாயெங்கும் இரத்தம். இரத்த வாடையும் குட்டி ஆடுகளின் எலும்புகள் நொருங்கும் சத்தமும் அக் கானகம் எங்கும் பரவுகிறது. நான் இரத்த வாடையை முகர்கிறேன். ஆமாம் எனக்கு அந்த வாசனை தெரிகிறது. இரண்டு அடிகளை நான் பின் நோக்கி வைக்கிறேன். என் கால்கள் ஏதோ மாற்றத்தை உணர்கின்றன. திடுக்pட்டவனாய்த் திரும்புகிறேன். ஒரு ஓநாய் என் அருகில். நான் அத்தோடு விழித்துக் கொண்டேன். எனக்கு இப்போதும் மணக்கிறது அந்த இரத்த வாடை.
நான் யோசிக்கிறேன். எனது கனவுக்கான மூல காரணம் என்ன? கண்டுகொள்ள இயலவில்லை. நான் எதையாவது கண்டு பயந்தேனா, இல்லையே! இன்றைய பொழுது நான் என்ன செய்தேன். நித்திரை விடடெழுந்ததும் இலங்கையில் இருந்து அம்மா அனுப்பிய கடிதமும் புகைப்படங்களும் கிடைத்தன. சார்சலில் நடந்த கூட்டத்துக்குப் போய் வந்தேன். அதை TULF, PLOTE, EPRLF-P இணைந்த ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு ‘இலங்கை இனப்பிரச்சினையில் எமது ஐக்கியம்’ என்ற தலைப்பில் ஒழுங்கு செய்திருந்தார்கள். கூட்டம் முடிந்து பின்னேரம் தான் வீடு வந்தேன்.
இரவு இணையத் தளங்களைப் பாரத்தேன். கிழக்கிலங்கைத் தேர்தல் நெருங்குவதால் இணையத் தளங்கள் எங்கும் தேர்தல் வாடை. தேசம் நெற்றில் இலங்கை ஜனநாயக ஒன்றியம் (SLDF), (TPF), (SLIF - UK), தலித் மேம்பாட்டு முன்னணி (SDOSLD) ஆகியவற்றால் வெளியிடப்பட்ட அறிக்கையைப் பார்த்தேன். தலித் மேம்பாட்டு முன்னணியின் தூ இணையத் தளத்தில் கிழக்கிலங்கை முன்னணியினால் வெளியிடப்பட்ட அறிக்கைளைப் பார்த்தன். இமெயில் மூலம் வந்திருந்த பிள்ளையானின் ஊடகவியலாளர் மாநாட்டு வீடியோவையும் பார்த்தேன். இரவு ஆட்டுக்கறியும் சோறும் சாப்பிட்டுவிட்டு ‘வெள்ளித்திரை’ என்கிற படமும் பார்த்துவிட்டுப் படுத்தேன்.
சீ! இவற்றுக்கும் என் கனவுக்கும் என்ன சம்பந்தம்?
Friday, March 20, 2009
எனக்கு இப்போதும் மணக்கிறது அந்த இரத்த வாடை.
Labels:
dreams,
dreams reasurch.,
dreamsreason,
thenmozidas,
தென்மொழ்தாஸ்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment